அடிமைகள் விலங்கை உடைத்திட எ ழுவோம்


10 டிசம்பர், 2010

ஏக்கம்

இமைச் சிறகுகளை
இருக மூடிக்கொண்டு
துயில் கனவிலேனும்
வயிறு நிரைய உணவும்
மனது நிறைய உடையும்
மழையில் நனையா வீடும்
வருமா என்ற ஏக்கத்தில்
வானக் கூரையின் கீழ்
வாடிக்கிடந்தான்
பலருல் ஒருவனாய் அவனும்...

23 அக்டோபர், 2010

பாரதிக்காக....

ஆடினோம்
பள்ளுப் பாடினோம்
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டானென்று

ஆதிக்குரல்

அகர முதல எழுத்தெல்லாம்
ஆதித் தமிழன் முதற்றே உலகு

மணல் வீடு

வாசல் தெளிச்சி - நீ
வரி வரியா கோலம் போட்டு
வந்து நான் பாக்கனும்னு
வம்பு பல செஞ்சவளே !

அஞ்சாறு வயசிலிருந்தே
அத்தானின் அருகிலிருந்து
அடுக்கு மல்லி பறிக்கச் சொல்லி
அழுதழுது சிரிச்சவளே !

சின்ன வயசிருந்தே
சின்ன சின்ன வீடுகட்டி
சில்லரையா சிருச்சி நாம
சிறுகுடும்பம் நடத்தினோமோ!

கருக்கல் நேரத்தில்
கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டு
கையில் குடமெடுத்து
கண்மாயிக்கு வந்தவளே !

நறுக்குத் தெரிச்சாப் போல
நாலு வார்த்தைச் சொல்லிபுட்டு
நடந்து நீ போகையிலே
நறுக்குத் தான் பட்டுப்போனேன்!

நொன்டிச் சாக்குச் சொல்லி
நோகவச்சு போரவளே
நொடிப் பொழுதில் என்னை
நொருக்கிப் போட்டவளே !

புதுவாழ்வின் கனவில்
புகையும் என் மனசு
புரியுமோ உனக்கு
புதுச் சீலை கட்டயிலே !

வாய்ச்ச கணவனுக்கு
வகை வகையா நீயாக்கி
வாய்க்கு ருசியாப் போடு - உன்
வாழ்க்கை மணத்திருக்க !

அப்பன் கண்டிப்பும்
அம்மாவின் கண்ணீரும்
அள்ளி நீ ஊத்தியதில்
அடியே நான் மூழ்கிப்போனேன் !

அள்ளியெடுத்து என்னை
ஆறடிக்குள் போட்டு
அந்தக் குழி மூடி - அதில்
அரசமரம் வைக்கச்சொல்லு !!!

16 அக்டோபர், 2010

தங்கர்பச்சானின் இன்றைய உள் அரசியல்!!!

சமீபத்தில் மும்பைத் தாராவி பகுதியில் நடைப்பெற்ற நாம் தமிழர் அரசியல் கட்சியின் கூட்டத்தில் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகருமான திரு. தங்கர் பச்சான் அவர்கள் மீண்டும் ஒரு முறை தனது உணர்ச்சி பூர்வமான தமிழ்வுணர்வை பொங்கி பாயவிட்டுள்ளார்.

இந்திய தமிழகத்தின் பல நூறு தமிழ் மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், அடித்தும் இந்தியாவின் எசமான நாடான இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டும் பல லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்து கொடுமைப்படுத்தியதை தடுக்க இயலவில்லை. பல்லாயிரக்கணக்கான நம் தமிழ் அக்கா, தங்கைகளை பாலியல் வன்புணர்வு செய்து தன் அப்பா, அண்ணன், தம்பிகளுக்கு முன்னாலேயே உடை கலைந்து வெற்றுடம்புடன் நடமாட வைத்து கொடுமைப்படுத்திய கொடுங்கோலன் இனவெறியன் ராசபக்சேயின் அட்டூழியத்தையும், அடக்குமுறையையும் தடுத்து நிறுத்த முடியாமல் போனது உண்மையே. காரணம் உலகத் தமிழினமே கண்ணீரில் துடித்துக்கொண்டிருந்த போது தாய் தமிழகத்தில் அந்த சோகமான நேரத்திலும் கூட போராட்டக்காரார்களை ஒருங்கிணைப்பதில் போட்டியும், பொறாமையும் தங்களில் யார் பெரியவர் என்கின்ற மனப்போக்கிலும் அத்தோடு அந்த தமிழ் உணர்வாளர்களுக்குள்ளும் உரைந்து கிடக்கின்ற சாதிவெறியும் தான் காரணம் என்பதை சிந்தனையாளர் உலகம் நன்றாகவே அறியும்.

ஒரு வேலை "படையாச்சி" படமெடுத்த தங்கர்பச்சான் அவர்களுக்கு தெரியாதோ என்னவோ ? இல்லையேல் அப்போது நடைப்பெற்ற ஈழ ஆதரவு போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் திரு. திருமாவளவன் அவர்களின் போராட்ட எழுச்சியை சரியாகப் பயன்படுத்தி அவருக்கு துணையாக இவர்கள் நின்றிருந்தால் தமிழக அரசே கூட தன் நிலையை மாற்றி மைய அரசை அடிபணியவைத்திடக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கும் அது நடக்காமல் போனதிற்கான காரணம் வீரியத்துடனும், உளப்பூர்வமாகவும், எழுச்சியுடன் போராடிய திருமா அவர்கள் ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவர் என்பது தான். இதை தங்கர்பச்சான் அவர்களும் அறிந்திருக்கக்கூடும் தமிழர்கள் போராட்டம் கூர்மழுங்கிப்போக காரணம் தமிழ்ர்கள் பல அரசியல் கட்சிகளாக பிரிந்திருப்பது தான் என்று கவலைப்படும் தங்கர்பச்சான் அவர்கள் இதைக் கூறியுள்ளதும் நாம் தமிழர் எனும் அரசியல் கட்சிமேடைதான்.

இனி தமிழர்கள் தன் குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயரிடவேண்டும் என்று தானும், தனது இரண்டு மகன்களுக்கும் தமிழில் பெயர் மாற்றம் செய்யவதாக கூறியுள்ளார் நல்ல முடிவுதான் ஆனால் ஏன் இத்தனைத் தாமதம். நாம் தமிழர் அரசியல் கட்சியில் மேடை கிடைத்த பிறகு தான் இந்த எண்ணம் தோன்றியதோ... இதற்கு முன்னால் திரு. திருமா அவர்கள் சுமார் ஒரு லட்சம் பேர்களுக்கு தன் தந்தை உட்பட தமிழில் பெயர் மாற்றம் செய்து வரலாறு படைத்தாறே.. அந்த நேரத்தில் தங்கர் பச்சான் அவர்களுக்கு தன் மகன்களுக்கு தமிழ் பெயர் வைக்க தோன்றாமல் போனதே ஏன்?அப்போது தமிழ் பெயர் மாற்றம் செய்தது திரு. சீமானாக இல்லாதது திருமாவாக இருந்தது காரணமோ..

இவ்வளவுக்கும் திருமா அவர்கள் தங்கர்பச்சான் அவர்களுக்கு விருதும் கேடயயும் வழங்கி சிறப்பித்தாரே தமிழர்கள் பல அரசியல் கட்சியாக பிறிந்து இருக்காமல் ஒரே அணியாக இருந்தால் மட்டும் போதாது அவர்கள் தங்கள் மனதில் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் சாதி உணர்வையும் தீண்டாமை எண்ணங்களையும் முதலில் விட்டொழிக்க வேண்டும் முடிந்தால் தங்கர் போன்றவர்கள் அதற்கு முயற்சிக்க வேண்டும் முதலில் தன் மனதில் இருந்து அதை அகற்றிவிட்டு...

9 அக்டோபர், 2010

பூமராங்

நீ கலைப்பை பிடித்து உழு
நான் வரப்பில் நின்று கண்காணிக்கிறேன்
நீ நாற்றுப்பிடிங்கி கட்டிவை
நான் எண்ணிப்பார்க்கிறேன்

உன் மனைவியை
குனிந்து நிமிர்ந்து
நாற்று நடச்சொல்!
என் மனைவி
களத்துமேட்டில்
அவளுக்கு கஞ்சி ஊற்றுவாள்!

இரவு பகல் பாராது
கண்விழித்து
தண்ணீர் பாய்ச்சு
காவல் காத்திரு
நெல்விளைந்து முற்றியதும்
அறுத்து-அடித்து-தூற்றி
மூட்டைகளாய் கட்டி
கொண்டுவந்து
என் வீட்டில் போடு

நான் உன்னை
வெளியே நிற்கச்சொல்லி
கூலி போடச் சொல்கிறேன்

வாங்கிக்கொண்டு
என்னை நிமிர்ந்துப்பார்
பல்லாயிரம் ஆண்டுகளாக
கூனிக்குறுகி நின்ற
என்னை நான் உன்னில்
பார்க்க விரும்புகிறேன்.

அர்ப்பணிப்பு

எழுது எழுது என்று என்னை நெம்புகோல் போட்டு நெம்பிய அண்ணன் அறிவுமதிக்கும், அப்பணியை அமீரகத்தில் இருந்துக்கொண்டு செய்த இசாகிற்கும், தாய்மண் வாசகர் வட்டம் தாய்வழித் தோன்றல்களுக்கும், எரிந்துக்கொண்டிருக்கும் இனமீட்சி நெருப்பில் தன் உயிர், உடமைகளை நெய்யாய் வார்த்த இனமீட்சி போராளிகளுக்கும்...

8 அக்டோபர், 2010

என்னுரை...

பல நூறு ஆண்டுகளாக தமிழகத்தில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு தன் தொன்மை வரலாற்றையும் தொலைந்துபோன, தன்மானத்தையும் தேடித் தேடி கலைத்து

"இழிவே எமது பிறப்பு
அழிவே எமது உயிர்ப்பு"

என்று நினைத்து, முதுகெலுமில்லாத வெரும் சதை பிண்டங்களைப்போல் வாழ்க்கை என்ற பெயரில் கண்ணீருடன் காலத்தை போக்கிக்கொண்டிருந்த என்னப்போன்றவர்களுக்கு "நாம் யார் நம் அடையாளம் என்ன" எப்படி நாம் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டோம் என்பதை அறியப்படுத்தி, மனுதர்ம இழிவுகளின் முகத்திரைக்கிழித்து, ஆரிய சூழ்ச்சிகளின் குறிகளை அறுத்து, ஆணவ ஆதிக்க வெறியரிகளின் திணவெடுத்த திமிறின் இடுப்பொடித்து எம் இனத்தின் எழுச்சிக்கு வித்திட்ட "எழுச்சித்தமிழர்.தொல்.திருமா"வின், உலக ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி அறிவுமேதை "புரட்சியாளர் அம்பேத்கர்" அவர்களின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு

நன்றியுடன்...
சே.ரெ.பட்டணம் மணி।